For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#EastLadakh | ராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா - சீனா!

09:26 AM Oct 25, 2024 IST | Web Editor
 eastladakh   ராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா   சீனா
Advertisement

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

Advertisement

கிழக்கு லடாக், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரிய விரிசல் விழுந்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுபாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியா கடந்த அக். 22-ம் தேதி அறிவித்தது. இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் (அக். 23) நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க இருவரும் உறுதிபூண்டனர். தற்போது கிழக்கு லடாக்கின் டெப்சாங் பகுதியில் உள்ள ‘ஒய்’ சந்திப்பு மற்றும் டெம்சோக்கில் உள்ள சார்டிங் நுல்லா சந்திப்பு பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கியுள்ளனர். மேலும், அந்த பகுதிகளில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement