சைபீரியாவை உலுக்கிய நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!
ரஷ்யாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலநடுக்கங்கள் பெரும்பாலும் சக்தி வாய்ந்தவையாகவே இருந்திருக்கின்றன. இதனால் பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டார் குடியரசு பகுதியில், இன்று காலை 8.48 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருப்பதாக ரஷ்ய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு, சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்க மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் நீர் விநியோகத்தில் சிக்கல்கள் உள்ளதால் அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக வதந்திகள் இணையதளத்தில் பரவி வருவதைப் பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.