இரண்டு வாரத்தில் 2வது முறையாக #Delhi மற்றும் வடமாநிலங்களில் நிலநடுக்கம்!
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் இன்று (செப்டம்பர் - 11ம் தேதி) பகல் 12.58 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8-ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் உணரப்பட்டதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள் :ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல்… #SandipGhosh குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
அண்டை நாடான ஆப்கானித்தான் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சில இடங்களில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, வீடுகள் மற்றும் அலுவகங்களில் இருந்து வெளியே வந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் டெல்லியில் நிலநடுக்கம் உணரப்படுவது இரண்டாவது முறையாகும். ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.