உ.பி.யில் திடீர் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று பிற்பகல் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
வங்கக்கடலில் உருவான ரிமல் புயல் சமீபத்தில் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையே கரையை கடந்தது. இது கரையை கடக்கும்போது கடும் மழை மற்றும் சூறை காற்றை ஏற்படுத்தியது. இதனால் வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன.
தொடர் கனமழை காரணமாக திடீரென பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வெள்ளத்தாலும் பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டன. சாலைகள் மண் சரிவால் மூடப்பட்டதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மழை வெள்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதனிடையே, மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இன்று பிற்பகல் 3.49 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.