ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை, ஊட்டி, கொடைக்கானலில் மே 7 ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த இ – பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கும்m நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழக அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், இ பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்துக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்வோருக்கு ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படக்கூடிய நிலையில், கொடைக்கானலில் எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, அபராதம் விதிக்கும் நடைமுறையைப் கொடைக்கானலிலும் பின்பற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் வசூலிக்கப்படும் சுற்றுச்சூழல் வரி உள்பட வரியாக எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது, அந்த தொகை எந்த வகையில் செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.