“E-Pass மூலம் எந்த பலனும் கிடைக்காது” - முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி!
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறையால் எந்த பலனும் கிடைக்காது என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்த நிலையில் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் குடும்பத்தோடு ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த இ-பாஸ் மூலம் எந்த பயனும் கிடைக்காது என முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
இ-பாஸ் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் :
- யார் யார் வருகிறார்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள் என்கிற புள்ளி விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் அதிக கூட்ட நெரிசல், போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்தலாம்.
- ஒரே குடும்பத்தில் தனி தனி வாகனங்களில் வருபவர்கள், ஒரே வாகனத்தில் வருவார்கள். இதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கையும் சற்று குறையும். அரசு பேருந்து, ரயில்களில் கூட்டங்கள் அதிகரிக்கும்.
- வசதி உள்ளவர்கள் இந்த சிரமங்களை தவிர்க்க அங்கு ஒரு சிறிய இடத்தையாவது வாங்கிக் கொள்வார்கள் . இதன் மூலம் ஊட்டி, கொடைக்கானலில் நிலத்தின் மதிப்பு கூடலாம்.
இ-பாஸ் மூலம் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் :
- இந்த E Pass நடைமுறை மூலம் லஞ்சம், ஊழல் போன்ற அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெறும்.
- மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் சிலர் காவல் துறை உதவியோடு Green Tax என்று அனைத்து வாகனங்களிடமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் அது போன்ற அரசு உத்தரவு எதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த பணம் அரசாங்கத்திற்கும் செல்வதில்லை. இ-பாஸ் நடைமுறை மூலம் மேலும் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- இந்த இ-பாஸ் நடைமுறை இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி சென்று வரலாம் என்ற தனிமனித உரிமைகளை பாதிப்பது போல் உள்ளது. நாளை இதை முன்னுதாரணமாகக் கொண்டு சென்னை போன்ற பெருநகரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த இதுபோன்ற உத்தரவு வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
- சொந்த நாட்டிற்குள்ளே பாஸ்போர்ட் வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பது போல் Pass வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல. நீதிமன்றத்தின் நோக்கம் சரியானதாக இருக்கலாம் ஆனால் அதனால் பெரிய அளவில் எந்த பலனும் ஏற்பட வாய்ப்பில்லை.
- பண பலம் இல்லாத பாமர மக்களுக்கு இது சிரமத்தை தான் உண்டாக்கும். தமிழக அரசு இந்த உத்தரவை நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும்.
- இதே போல கொடைக்கானலிலும் அடிப்படை வசதிகளையும் மாற்று பாதைகளையும் உருவாக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம். இதை ஒழுங்குபடுத்த காவல்துறையும், வருவாய் துறையும் இணைந்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டால் தான் சரியான தீர்வாக இருக்குமே தவிர E Pass கொடுப்பதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது” என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.