ஈக்வடாரில் தொலைக்காட்சி நேரலையின் போது, துப்பாக்கியுடன் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்
ஈக்வடார் நாட்டில் தொலைக்காட்சி நேரலையின் போது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலின் தலைவர்கள் இரண்டு பேர் சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பியதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
இதனால் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அதிபர் டேனியல் நோபாவா அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. ஈக்வடார் நாட்டில் பிரபலமான தொலைக்காட்சி அரங்கில் நேரலையின் போது, துப்பாக்கியுடன் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தொலைக்காட்சி ஊழியர்களை தாக்கி தொலைக்காட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தொலைக்காட்சி ஊழியர்களை தாக்கிய காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானதால் நாடு முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை தொலைக்காட்சி அலுவலக ஊழியர்களை பத்திரமாக மீட்டதோடு 13 பேரை சிறைபிடித்துள்ளனர். தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
போதைப் பொருள் விற்பனை கும்பலின் தலைவன் சிறையில் இருந்து தப்பிய பின்னர் இதுவரை 7 காவல்துறை உயர் அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டு தாக்குதல்கள் தொடர்வதால் நாடு முழுவதும் ராணுவம் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.