பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் மாநிலங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், 'மாநில நிதிநிலை 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆய்வு' என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற இருப்பதாக கூறியுள்ளதாகவும், மேலும் சில மாநில அரசுகள் இதைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதால் மாநில அரசுகளுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மூலதனச் செலவுகளுக்குக் கூட அரசிடம் நிதி இல்லாத சூழல் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய ஓய்வூதிய முறையில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறினால் நிதிச் சுமை நான்கரை மடங்கு வரை அதிகரிக்கும் என்றும், ஏற்கெனவே சில மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை, அம்மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 4 சதவீதம் வரை உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : 3வது டி20 : இந்தியா, தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை..!
மேலும், மாநிலங்களின் கடனின் தேசிய சராசரி 27.6 சதவீதமாக உள்ள நிலையில், மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமற்ற வகையில் சலுகைகள் அறிவிப்பது, மானியம் வழங்குவது உள்ளிட்ட நிதிசார்ந்த செலவினங்களை அதிகரித்தால், அது நிதிநிலையை மேலும் சீர்குலைக்கும் என்றும் ஆர்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.