நிதி நெருக்கடி காரணமாக நிரந்தரமாக மூடப்படும் ‘கூ' செயலி!
ட்விட்டர் செயலிக்கு போட்டியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூ (KOO) செயலி நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சமூக வலைதளமான கூ மூடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூ நிறுவனத்தின் நிறுவனர் செயலியின் நிறுவனர்கள் அபர்மேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா தெரிவித்துள்ளதாவது;
பல பெரிய இணையதள நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து நாங்கள் ஆய்வு செய்தபோது நாங்கள் விரும்பிய முடிவை கூ செயலி கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்தாலும் பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளதால் இதை மூட வேண்டிய கடினமான முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியவர்களுக்கும், பயனர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூரு நிறுவனத்தால் ட்விட்டருக்கு போட்டியாக தொடங்கப்பட்ட செயலிதான் கூ. இந்தியர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலி தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது. ட்விட்டர் நிறுவனம் போல கணக்கை தொடங்க கூ செயலி, அதிக தகவல்களை கேட்பதில்லை. வெறும் போன் நம்பர் மட்டும் இருந்தால் போதும், கடவுச்சொல் செல்பேசிக்கு குறுந்தகவலாக வரும். அதை தட்டச்சு செய்தால் போதும், கூ செயலியில் கணக்கை தொடங்கி இடுகைகளை பதிவிட ஆரம்பிக்கலாம்.
ஆனால் 2023 ஆம் ஆண்டில் அதன் பணியாளர்கள் செலவுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் தற்போது இந்த செயலியை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து வருவோம் என்றும் வேறு வழியில் நீங்கள் எங்களை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.