திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி!
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்த நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது. இந்த தேர்தலில் மொத்தம் 82.48% வாக்குகள் பதிவானது. இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக 19வது சுற்று நிலவரப்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வந்ததை திமுக-வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதற்கிடையே, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திமுக மூத்த தலைவர்கள் பலரும் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.