கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது!
கோவை மாவட்டத்தில் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அப்பொழுது உயர் ரக போதைப் பொருளான மெத்தபேட்டமைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புலியகுளம், அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மதிலாஜ், விக்னேஷ், அஜித் என்பது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரும் பெங்களூரில் இருந்து மொத்தமாக உயர்ரக போதைப் பொருளான மெத்தப்பேட்டமைனை வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து ஆறு லட்சம் மதிப்பிலான 195 கிராம் உயர் ரக போதை பொருள் மெத்தப்பேட்டமைனையும் அதை உபயோகிப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள், ரூபாய் 15,000 பணம் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே விசாகப்பட்டினம் மற்றும் கோவையில் கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.