போதைப்பொருள் கடத்தல் - ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டவிரோத பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபக் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இம்மனு மீதான விசாரணை நடைபெற்றது.
விசாரணையில், "போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார். மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.
ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது" என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.
இந்த நிலையில், இன்று ஜாமின் மனு மீது நீதிபதி சுந்தரமோகன் தீர்ப்பளித்துள்ளார். அப்போது, டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீமுக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி சுந்தரமோகன் உத்தரவிட்டார்.