போதைப் பொருள் கடத்தல் வழக்கு - மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜாபர் சாதிக்!
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் நேற்று சென்னை அழைத்துவரப்பட்ட நிலையில், விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம், ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கிய விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார். போதைப்பொருள் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டவுடன் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜாபர் சாதிக் இதுவரை ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ ‘சூடோபெட்ரின்’ என்ற போதைப்பொருள் தயாரிப்பு வேதிப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர், டெல்லியில் விசாரணை முடிந்து விமானம் மூலம் ஜாபர் சாதிக் நேற்று (மார்ச் 18) சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, ஜாபர் சாதிக்கிடம் சுமார் 12 மணி நேர விசாரணைக்கு பிறகு மீண்டும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜாபர் சாதிக்கின் மேலாளர் மற்றும் கணக்காளரிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை சேகரிக்கும் பணியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.