போதைப்பொருள் கடத்தல் வழக்கு - இயக்குநர் அமீரிடம் நடந்த என்சிபி விசாரணை 10 மணி நேரத்திற்கு பின் நிறைவு!
ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
டெல்லியில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரியவந்தது.
இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா கைது செய்யப்பட்டார். இதனிடையே, அமீர் இயக்கி வந்த திரைப்படத்திற்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளராக இருந்த நிலையில், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராக வேண்டும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.அதன்படி நேற்று தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்தில் காலை 10 மணிக்கு இயக்குநர் அமீர் ஆஜரானார். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூத்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் போது அமீர் தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜாபர் சாதிக்குடனான தொடர்பு, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இயக்குநர் அமீரிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அமீர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.