போதை பொருட்கள் பறிமுதல் : ஆப்ரேசன் கிளீன் கோவை என பெயர் வைத்துள்ளோம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேட்டி!
கோவை செட்டிபாளையம் அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளில் காவல்துறையினர் இன்று காலை 5 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவை கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சில மாணவர்களை பிடித்து தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "கோவை மாவட்டத்தில் போதைபொருட்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ரகசிய தகவலின் பேரில் 2 டி.எஸ்.பி தலைமையில் பத்து ஆய்வாளர்கள், 400 போலீசார் கொண்ட காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 13 நபர்கள் கைது செய்யபட்டுள்ளார்.
6.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பறிமுதல் செய்யப்படுள்ளது. எட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 46 இரண்டு சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆப்ரேசன் கிளீன் கோவை என பெயர் வைத்துள்ளோம். வெளி மாவட்டங்களில் குற்ற பின்னணி உள்ளவர்கள் அடைக்கலம் அடையும் பகுதியாக உள்ளதால் திடீர் சோதனை மேற்கொண்டோம். 4 பேர் மீது கொலை, கொலை முயற்சி வீட்டின் பூட்டை உடைத்த வழக்கு, சூடான் நாட்டை சேர்ந்த நபரும் கைது செய்யப்படுள்ளார். கூல் லிப் விற்றவர்களிடமிருந்து பேடிஎம் கருவி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செட்டிபாளையம், மதுக்கரை, சூலூர் பகுதிகளில் தங்கி உள்ள விடுதிகள் மற்றும் அறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கிணத்துகடவு பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.