சென்னையில் போதைப்பொருள் விற்பனை - 5 பேர் கைது!
வடசென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்த நிலையில் வடசென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கஞ்சாவை ரகசியமாக விற்பனை செய்துவந்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணயின் மூலம் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஏறு கிணறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் அளித்த தகவலின்படி நாவலுரை சேர்ந்த வெங்கடேஷ் (28),பெருங்குடி பகுதியை சேர்ந்த குமார் (24), ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சரண் மற்றும் அருணாச்சலம் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி, அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களிடம் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக ஒப்புக்கொண்டனர். பின்னர் அதனை சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.