“போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு“- செயலி அறிமுகக் கூட்டம்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு“ மொபைல் செயலி தொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுடன் அறிமுகக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தலைமையில் நேற்று (18.02.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
போதையில்லா தமிழ்நாட்டை அடைய போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் போன்றவை தொடர்பான பிரச்னைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 11.01.2025 அன்று ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியின் பயன்பாட்டைப் பற்றி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மொபைல் செயலி மூலம் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து கல்வி நிறுவனங்களின் தொடர்புடைய முதல்வர், தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், உதவி ஆணையர் (கலால்) பால்பாண்டி உட்பட துறை அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.