சிறையில் கிடைத்த போதைப்பொருள் டீல்! காத்திருந்து தூக்கிய போலீஸ்!
காரைக்குடியை சேர்ந்த அண்ணாமலை, மதுரை மேல அண்ணாதோப்பு பகுதியை சேர்ந்த லெட்சுமணன், ராமர் மற்றும் ஆனையூர் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் ஆகிய நான்கு பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக இருப்பவர்கள்.
இவர்கள் குற்றவழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் போது நவீன் நாகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலமாக பெங்களூரில் உள்ள தினேஷ், பூனையன் ஹரி, காக்காமுட்டை கார்த்திக் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
இந்நிலையில் நவீன் நாகராஜ் தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் நிலையில், அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு, அவருடைய ஆலோசனையின்படி பெங்களூர் தினேஷ் மூலமாக கஞ்சாவையும் மெத்தபெட்டமைன் போதைப்பொருளையும் வாங்கி வந்து 4 பேரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் இதேபோல ஜெயிலில் இருந்து இன்ஸ்டாகிராம் மூலம் நவீனிடம் பேசி பெங்களூர் தினேஷுடம் இருந்து கஞ்சாவையும், மெத்தபெட்டமைனையும் பெற்று மதுரையில் விற்பனை செய்வதற்காக கோயமுத்தூரிலிருந்து பேருந்து மூலமாக மதுரை கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களை பின்தொடர்ந்த காவல்துறையினர், நேற்று மதுரை பாத்திமா கல்லூரி அருகே பேருந்து நிறுத்தத்தில் வைத்து அண்ணாமலை, லெட்சுமணன், ராமர், சூர்யபிரகாஷ் ஆகிய 4 பேரையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.