பெங்களூரில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ விரைவில் இயக்கம் - பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில், நம்ம மெட்ரோ மஞ்சள் நிற பாதையில் விரைவில் இயங்கும் என பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) அதிகாரிகளை, எம்.பி., தேஜஸ்வி சூர்யா, நேற்று சந்தித்தார். மெட்ரோ மஞ்சள் நிற பாதை, மெட்ரோ மூன்றாம் கட்ட பணிகள் குறித்து தகவல் கேட்டறிந்தார். திட்ட பணிகள் தாமதமாவதால், நகர மக்களுக்கு ஏற்படும் தொந்தரவு குறித்து, அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்து, பணிகளை விரைவில் முடிக்கும்படி வலியுறுத்தினார்.
இது குறித்து, 'எக்ஸ்' எனும் வலைதளத்தில் தேஜஸ்வி சூர்யா கூறியிருப்பதாவது:
“மெட்ரோ மூன்றாம் கட்ட பணிகளுக்கு, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும். ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையே, 19 கி.மீ., துார மெட்ரோ மஞ்சள் பாதை பணிகள் தாமதமாகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை, அதிகாரிகளிடம் விவரித்தேன். ஒவ்வொரு துறையிலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பணிகளை முடிக்க முயற்சிக்கின்றன. ஆனால் பிஎம்ஆர்சிஎல் மட்டும், இலக்கை எட்டுவதில்லை. இது மக்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.
Met with the MD & officials of BMRCL and discussed the progress of the Yellow Line & Metro Phase-3, today.
While the approval for Metro Phase-3 is at the advanced stages with GoI, we're working towards expediting it.
Regarding the delays in the Yellow Line, I have conveyed the… pic.twitter.com/HK1pAX1Ct9
— Tejasvi Surya (@Tejasvi_Surya) February 12, 2024
விரைவில் புதிய மெட்ரோ பாதையில், போக்குவரத்தை துவக்கி, போக்குவரத்து நெருக்கடி பிரச்னையில் இருந்து, மீட்க வேண்டும். மெட்ரோ மஞ்சள் நிற பாதையில், எப்போது ரயில் போக்குவரத்து துவங்கும் என, மக்களின் சார்பில், பிஎம்ஆர்சிஎல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினேன். விரைவில் சென்னையில் இருந்து வரும் ஓட்டுனர் இல்லாத ரயில் பெட்டிகளை, சோதனை முறையில் இயக்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்” என அவர் கூறினார்.