ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான குடிநீர் தாராளமாக இருக்கிறது..! - மத்திய அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான குடிநீர் தாராளமாக இருக்கிறது என்று எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நம் நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தினசரி தேவையான அளவுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறதா? அதில் பற்றாக்குறை இருந்தால் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதில்:
கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான, குடிப்பதற்கு ஏற்ற நீரை தேவையான அளவுக்கு தொடர்ந்து நீண்டகாலத்திற்கு விநியோகிப்பதுதான் மத்திய அரசின் இலக்கு. இந்த இலக்கை அடைவதற்குத்தான் 2019ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
குடிநீர் விநியோகம் என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயம். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அமைந்த திட்டங்கள் உட்பட குடிநீர் விநியோகம் தொடர்பான திட்டமிடல், நிதி ஒதுக்கல், அமலாக்கம் என அத்தனையும் மாநில அரசுகளால்தான் செயல்படுத்தப்படுகிறது. இந்த விஷயங்களுக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி, ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு நாளைக்கு 30 முதல் 50 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த அளவு தண்ணீரை வைத்து அந்த தனி நபர் குடிக்க, குளிக்க, துணிகளைத் துவைக்க, வீட்டை சுத்தப்படுத்த என அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்படி இந்தத் தேவைகளுக்காக ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தண்ணீர் தேவை என்று நாம் நிர்ணயித்திருக்கிறோம்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடங்கிய பிறகு, கிராமங்களுக்கு குடிநீரை குழாய் மூலம் கொண்டு செல்லும் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் அடைந்திருக்கிறோம். இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவில் 3.23 கோடி கிராமப்புற வீடுகளுக்குத்தான் இந்த வசதி இருந்தது. இப்போது 13.81 கோடி வீடுகளுக்கு (71.77%) குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இதுதவிர ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிலத்தடி நீர் வாரியமும் ஒவ்வொரு மாநில அரசும் இணைந்து, நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரம் ஆய்வு செய்யப்டுகிறது. இந்த ஆண்டு செய்யப்பட்ட ஆய்வின்படி நம் நாட்டில் 44,900 கோடி கியூபிக் மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் வளம் இருக்கிறது. இதில் 40,700 கோடி கியூபிக் மீட்டர் அளவுக்கான நீரை எடுத்துப் பயன்படுத்த முடியும். ஆனால் நாம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24,100 கோடி கியூபிக் மீட்டர் நீரைத்தான் நிலத்தடியில் இருந்து எடுக்கிறோம். இதில் விவசாயத்திற்கு மட்டும் 21,000 கோடி கியூபிக் மீட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டின் நீர்வளத்தை அதிகப்படுத்த ஜல்சக்தி துறை அமைச்சகம் கங்கை சீரமைப்பு, ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம் உட்பட பல திட்டங்களைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அத்துடன் இதற்காக மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் மொத்தமுள்ள 1.25 கோடி வீடுகளில் இதுவரை 97.46 லட்சம் வீடுகளுக்கு (77.77 %) குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் அமலாகிவிட்டது.
இதையும் படியுங்கள் : நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு - மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 27.59 பில்லியன் கியூபிக் மீட்டர் நிலத்தடி நீர் உற்பத்தியாகிறது. இதில் 1951 கோடி கியூபிக் மீட்டர் நீரை ஒவ்வொரு ஆண்டும் எடுக்கிறோம். இதில் விவசாயத்திற்காக 1348 கோடி கியூபிக் மீட்டர், தொழிற்சாலைகளுக்கு 15 கோடி கியூபிக் மீட்டர், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 79 கோடி கியூபிக் மீட்டர் நீரும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான நீர் மற்றும் விவசாயத் தேவைக்கான நீர் தாராளமாக இருக்கிறது.
இவ்வாறு மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்தார்.