திராவிடம் 4.0 - அண்ணா முதல் உதய் அண்ணா வரை!
திமுக தொடங்கி இந்த ஆண்டுடன் 75வது ஆண்டு நிறைவடைகிறது. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்டோரால் 1949, செப்.17 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பெருமளவில் இளைஞர்களைக் கவர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இயங்கியது.
எழுத்துக்கள், பேச்சுகள், நாடகங்கள், பத்திரிகைள் வாயிலாக மிகத் துல்லியமாக தங்களது இயக்கத்தை கட்டமைத்த திமுக படிப்படியாக வளர்ச்சியை கண்டது. ஆரம்பத்தில் சமூக இயக்கமாக இயங்கத் தொடங்கிய திமுக 1957ம் ஆண்டு அரசியலில் இறங்கிய 1967ல் தவிர்க்க முடியாத மாபெரும் அரசியல் பேரியக்கமாக மாறியது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக வரலாற்றில் மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. டால்மியாபுரத்தை கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்த நிகழ்வு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டது.
திராவிட நாயகன் - பேரறிஞர் அண்ணா
1909ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நெசவுக் குடும்பத்தில் நடராசன் – பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார் அண்ணத்துரை எனும் அண்ணா. தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி காஞ்சிபுரம் பச்சையப்பர் கல்வி நிறுவனத்தில் பயின்றார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு வறுமை காரணமாக மேற்படிப்பைத் தொடர முடியாத அண்ணா, காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக ஆறு மாதங்கள் பணியாற்றினார்.
இதன்பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்த அவர் அதே கல்லூரியில் பொருளாதரம் மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறந்த வாசகராக இருந்த அண்ணா சென்னையில் சென்று படிக்காத நூலகங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு புத்தகங்கள் மீது அதீத பிரியம் கொண்டிருந்தார்.
தமிழ்நாடு என்று பெயர் இருக்கும் காலமெல்லாம் இந்த மாநிலத்தை அண்ணாதுரை ஆள்கிறான் என அண்ணா பேசியது நேற்றோ இன்றோ அல்ல. ஆனாலும் இந்த வாசகம் தமிழ்நாட்டு அரசியலில் இன்றும் எதிரொலிக்கிறது. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த ஒன்றை தமிழர்கள் வாழ்கிற நாடு என்னும் பொருள்படி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். I belongs to Dravidian Stock என்று அண்ணா நாடாளுமன்றத்தின் கன்னிப் பேச்சில் உதிர்த்த சொற்கள்தான் இன்றைக்கும் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பல எம்பிக்களின் உரையின் துவக்கமாக இருக்கின்றன.
'மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி' என்பது அண்ணாவின் புகழ் பெற்ற முழக்கமாகும். இன்றைக்கு தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் அண்ணா முன்வைத்த மாநில சுயாட்சிக் கொள்கைதான். திராவிட அரசியல் இயக்கத்தின் முதல் வித்து பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையல்ல.
அண்ணா முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தமிழ்நாடு என பெயர்மாற்றம், அரசு சின்னத்தில் ‘சத்யமேவ ஜெயதே’ என்று இருந்த வடமொழிச் சொல்லை ‘வாய்மையே வெல்லும்’ என மாற்றியது, சாதி மறுப்பு மற்றும் சடங்கு மறுப்பு திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சுயமரியாதை திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது, இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் இருமொழி கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது, பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டது எனப் பலவேறு முற்போக்கு திட்டங்களையும் அவர் கொண்டு வந்தார்.
திராவிடம் 2.0 - கல்லக்குடி தந்த கருணாநிதி
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கல்லக்குடிக்கு முக்கிய பங்கு உண்டு. திருச்சி அருகேயுள்ள கல்லக்குடி என்ற ஊரின் பெயர் டால்மியாபுரம் என்று மாற்றியமைக்கப்பட்டதைக் கண்டித்து, 1953, ஜூலை 15-ம் தேதி தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார் கருணாநிதி. இந்தப் போராட்டம் கருணாநிதிக்கு மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
திமுகவை தோற்றுவித்ததில் முக்கிய பங்காற்றிய கருணாநிதி அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் திமுகவை வழிநடத்திய கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றப் பின்னர் தான் எவையெல்லாம் திராவிட இயக்கத்தின் கோரிக்கைகளாக ஏட்டில் இருந்தனவோ அத்தனையும் செயல் வடிவம் பெற்றன. ஏழை எளிய மக்கள் நலம் பெற்றனர்.
கை ரிக்ஷா ஒழிப்பு, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை வழிநடத்தும் முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமை,அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதம் இட ஒதுக்கீடு, கணவனை இழந்த பெண்களின் மறுமணம், சாதி மறுப்பு திருமணத்திற்கு உதவித் தொகை, குடிசை மாற்று வாரியம் அமைத்தது, சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தது, சமத்துவபுரம் என அசைக்க முடியாத திராவிட அரசியலின் தலைமகனாக ஜொலித்தார் கருணாநிதி.
1970ம் ஆண்டில் பெரியார் உயிருடன் இருக்கும்போதே கோயில் கருவறைக்குள் செல்லும் போராட்டத்தைப் அறிவித்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் விரைவில் வரும் என நம்பிக்கை அளித்தார். அதன் தொடர்ச்சியாக நீண்ட நெடிய சட்டபோராட்டத்திற்கு பிறகு 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசாணை பிறப்பித்து, அதற்கான சட்டத்தையும் இயற்றினார். அப்போது, “பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டார்.
திராவிட அரசியல் இத்தனை தூரம் செழித்து அதன் அறுவடையும் சிறப்பாக அமைந்ததற்கு கலைஞர் கருணாநிதி மிக முக்கிய காரணமாவார்.
திராவிடம் 3.0 - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
திராவிட இயக்க குடும்பத்தில் பிறந்த ஸ்டாலின் திராவிடம், மொழிப் பற்று, தமிழினம், சமூக நீதி எனும் கொள்கையிலேயே வளர்ந்தார். 1968 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து கோபாலபுரத்தில் திமுக இளைஞரணியை ஆரம்பித்தார் மு.க.ஸ்டாலின். 1983 முதல் 2018 வரை நாற்பது ஆண்டுகளாக திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்தார்.
1975ம் ஆண்டு நாடே அவசர நிலை பிரகடணத்தால் அவதியுற்றது. துடிப்பு மிக்க இளைஞரியின் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அவசரநிலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மிசா சட்டத்தின் கீழ் ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார். 1989ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் சட்டமன்ற்த்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ம் ஆண்டு சென்னை மேயராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சிங்கார சென்னை என்ற திட்டத்தை செயல்படுத்தினார்.
2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1,75,493 மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கியது, ஒகேனக்கல் மற்றும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உட்பட பல திட்டங்களை செயல்படுத்தினார். 2008ம் ஆண்டு திமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
2016ம் ஆண்டுத் தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018ல் திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக் குறைவால் மறைந்ததை அடுத்து திமுகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு மற்றும் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான இடம் தொடர்பான சர்ச்சையில் நீதிமன்றத்திற்கு சென்று சட்டபோராட்டத்தில் வென்று மகனாகவும் கட்சியின் முக்கியத் தலைவராகவும் இருந்து இறுதி மரியாதையை நிறைவேற்றினார். ஒரே ஒரு முறையாவது உங்களை அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வாசிப்போரை கலங்கச் செய்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்த மு.க.ஸ்டாலின் திராவிட அரசியலின் 3.0 ஆக முதலமைச்சரானார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அவர் உறுதிமொழி எடுத்தது இந்தியாவையே புருவம் உயர்த்தி பார்க்க வைத்தது. Satiln is more Dangerous than Karunanidhi என்று விமர்சிக்கவும் வைத்தது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் விடியல் பயண திட்டம், மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை, காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்களை நிறைவேற்றி திராவிட அரசியலின் பாரம்பரியத்தை தொடர்கிறார்.
திராவிடம் 4.0 - உதயநிதி ஸ்டாலின்
திராவிட இயக்க குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலின் தனது இளமைக்காலம் முதலே தமிழ்நாடு அரசியலை உற்று கவனித்து வந்தார். நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தாலும் அரசியல் திராவிட இயக்கத்தை படித்திருக்கிறார். 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக உறுப்பினராக போராட்டத்தில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வந்தார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் சூறாவளி பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அடுக்கு மொழியில் அல்லாமல், எளிமையான முறையில் , அண்ணே, அக்கா என உரிமையோடு தொண்டர்களிடம் அவர் பேசியது பெரிதும் பயன் அளித்தது. அத்தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு ஜூலை 7 அன்று திமுக இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 சட்டமன்றத் தேர்தல் என்பது முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாமல் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் தமிழ்நாட்டில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிருந்தது. தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்காக தேர்தல் பரப்புரையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் முதல் நாளே திருவாரூரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் . பின்னர் விடுதலையானதும் மீண்டும் பரப்புரைக் களம் சூடுபிடித்தது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக உறுதி அளித்து விட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை என கேள்வி எழுப்பினார். குறிப்பாக சென்ற இடமெல்லாம், எய்ம்ஸ் என எழுதப்பட்ட ஒற்றை செங்கல்லை உயர்த்தி காட்டிய போது, அதிமுக, பாஜக கட்சிகளின் மீதான நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தது போலிருந்தது.
இதேபோல பணமதிப்பிழப்பால் செல்லாத 1000 ரூபாய் நோட்டுடன் பிரசாரம் செய்தது, நீட் தேர்வுக்கு எதிரான பிரசாரம், 1ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு 29பைசா தான் தருகிறது என்கிற பிரசாரம் என தேர்தல் களத்தையும் தாண்டி உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் அனல் பரந்தது. இதன் தொடர்ச்சியாக சனாதன தர்மத்தை குறித்து அவர் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளானது.
2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். வெற்றி பெற்ற பிறகு தொகுதிப் பணிகளில் மிகவும் தீவிரமாக இறங்கிய உதயநிதி ஸ்டாலின், வீதிவீதியாக பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பொதுக் கழிப்பறைகள் என அதிரடியாக ஆய்வுகளை நடத்தி கவனம் பெற்றார். உதயநிதி ஸ்டாலின் தீவிரமான களப்பணிகளுக்கு அவருக்கு கட்சியினரிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்ட நிலையில் அமைச்சர் பதவியையும் பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து 2022 டிசம்பர் 14ம் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக அவர் பதவியேற்ற பின்னர் பல சர்வதேச விளையாட்டுகளை தமிழ்நாட்டில் நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். உதாரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், ஃபார்முலா4 கார் பந்தயம், கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் மைதானம் என பல சாதனைகளை புரிந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அவர் பொறுப்பேற்று திராவிட அரசியலின் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக உருவெடுத்துள்ளார்.