அயோத்தி ராமர் கோயிலில் அதிரடி மாற்றம்! அர்ச்சகர்களுக்கு மஞ்சள் நிற உடை! செல்போன் எடுத்துச்செல்ல தடை!
அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்கள் காவி நிறத்திற்கு பதிலாக இனி மஞ்சள் நிறத்தில் உடை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு தரிசனத்திற்காக செல்கின்றனர். அயோத்தி ராமர் கோயிலில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் அர்ச்சர்கர்கள் உடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ராமர் கோயில் கருவறையில் கடவுளுக்கு சேவை செய்யும் அர்ச்சர்கர்கள் இனி மஞ்சள் (பீதாம்பரி) நிறத்தில் உடை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரத்தின் அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "அர்ச்சகர்கள் இதுவரை அணிந்து வந்த காவி உடை மாற்றப்பட்டு மஞ்சள் நிற உடை அணிய வேண்டும். முன்னதாக, காவி நிறத்தில் அர்ச்சகர்கள் சௌபந்தி எனப்படும் மேலாடை, வேட்டி, தலைப்பாகை அணிந்திருந்தனர். தலையில் கட்டப்படும் தலைப்பாகை துணி பருத்தியால் ஆனதாக இருக்கும்.
அது மட்டுமல்லாமல் தலைப்பாகையை மிக நேர்த்தியாக கட்டுவதற்கு, அர்ச்சகர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சில உதவி அர்ச்சகர்கள் மட்டுமே மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த நிலையில், இனி ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் குழுவும், பீதாம்பரி நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ச்சகர்கள் ராமர் கோயில் கருவரைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்திற்காக செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும, அண்மையில் கருவறைக்குள் தண்ணீர் கசிவது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, ராமர் கோயிலின் கருவறைக்குள் சேவை செய்யும் அர்ச்சகர்களின் அமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை, கோயிலின் கருவறைக்குள், ஒரு மூத்த அர்ச்சகர் மற்றும் அவருக்கு உதவியாக 4 உதவி அர்ச்சகர்கள் என 5 பேர் கொண்ட குழு இருக்கும். ஆனால், தற்போது ஒரு மூத்த அர்ச்சகர் மற்றும் 4 உதவி அர்ச்சகர்களுடன், 5 பயிற்சி அர்ச்சகர்களும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. கோயிலின் கருவறையில் அதிகாலை 3.30 மணி முதல் இரவு 11 மணி வரை அர்ச்சகர்கள் சேவை செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.