இரட்டை இலை சின்னம் விவகாரம் - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி முடித்து வைப்பு!
இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்யும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடி தொடர்பாக தரப்பட்டுள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா அமா்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரைணக்கு வந்த போது, புகழேந்தி சாா்பில் ஆஜரான வழக்கறிஞர், '2017-ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக கட்சியின் பெயா் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தோ்தலுக்கான வேட்பாளா் மனுவில் பொதுச்செயலாளா் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனித் தனி புகாா் மனுக்களை இந்திய தோ்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கிறோம். ஆனால், தோ்தல் ஆணையம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி சார்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுகிட்ட நீதிபதி, தற்போது அதிமுக இரண்டு அணிகளாக உள்ளதா என்றும் அதனால்தான் இரு தரப்பும் அதிமுகவுக்கு உரிமை கோருகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சாா்பில் ஆஜரான வழக்கறிஞரர் பாலாஜி சீனிவாசன், 'அதிமுக என்பது ஒரே அணியாகத்தான் உள்ளது. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவா்களுக்கே கட்சியும், சின்னமும் கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் பெரும்பான்மை அடிப்படையில் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே எங்களை அங்கீரித்துள்ளது. மேலும், புகழேந்தி அதிமுகவில் ஒரு அடிப்படை உறுப்பினா் கூட கிடையாது. அவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா். எனவே, அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவை பொறுத்தவரை அதன் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தோ்ந்தெடுத்துள்ளது. கட்சியின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களும் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே இருக்கிறார்கள் எனவே, இந்த விவகாரத்தில் புகழேந்தி தலையிட எந்த உரிமையும் இல்லை' என எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சச்சின் தத்தா, இரட்டை இலை சின்னம், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார். அதோடு, தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க புகழேந்திக்கு அறிவுறுத்திய நீதிபதி, இந்த மனு மீது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கும் நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டார்.