“AR Rahman மீது அவதூறு பரப்பாதீர்கள்... அவர் தலைசிறந்த மனிதர்” - விவாகரத்து குறித்து சாய்ரா பானு விளக்கம்!
ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் -சாய்ரா தம்பதியினர் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இது தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் தந்தை – தாய் பற்றி பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிப்பதாக அவர்களது மகன் அமீன் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இதைதொடர்ந்து தற்போது தன்னை பற்றி அவதூறு வீடியோக்களை பதிவிடுபவரை சட்டபடி தண்டிக்கப்படுவர் என ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் அதிகார நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து அவரின் மனைவி சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சாய்ரா பானு கூறியிருப்பதாவது,
"நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த 2 மாதங்களாக எனது உடல்நிலை சரியில்லை. அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து விலகியிருக்கிறேன். அவரைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். உலகிலேயே தலைசிறந்த மனிதர் அவர். என்னுடைய குழந்தைகள், ஏ.ஆர்.ரஹ்மான் என யாரையும் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்... அதே அளவு அவரும் என்னை நேசிக்கிறார். அவர் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்த வேண்டாம்"
இவ்வாறு சாய்ரா தெரிவித்துள்ளார்.