நெருப்புடன் வீளையாடாதீர்கள்; பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம்!
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision - SIR) என்ற பெயரில், பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை, குறிப்பாக பின்தங்கிய மற்றும் மாற்றுக்கருத்து கொண்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை, திட்டமிட்டு நீக்கி, தேர்தல் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற ஆளும் பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன.
பீகாரில் நடந்ததே இதற்குச் சிறந்த உதாரணம்: ஒரு காலத்தில் தங்களுக்கு வாக்களித்த அதே வாக்காளர்கள் இப்போது தங்களை வெளியேற்றுவார்கள் என்பதை டெல்லி ஆட்சி அறிந்திருக்கிறது. அதனால்தான் வாக்காளர்களையே வாக்களிக்க விடாமல் தடுக்க முயற்சிக்கிறது, என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
உங்களால் எங்களைத் தோற்கடிக்க முடியவில்லை என்றால், எங்களை அழிக்க முயற்சிக்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். எங்கள் ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் உறுதியான எதிர்ப்புடன் எதிர்கொள்வோம், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனது முழு பலத்துடன் இந்தக் குரலை எழுப்பும் என்றும், இந்த அநீதியை ஜனநாயக ரீதியிலான அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் எதிர்த்துப் போராடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் இது ஒரு மாநிலத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது நமது குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது. ஜனநாயகம் மக்களுக்குச் சொந்தமானது. அதை திருட முடியாது, என தெரிவித்துள்ளார்.