For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“விஜயகாந்தை கஷ்டப்படுத்தாதீர்கள்!” - இயக்குநர் பாண்டிராஜ் ஆதங்கம்!

04:36 PM Dec 14, 2023 IST | Web Editor
“விஜயகாந்தை கஷ்டப்படுத்தாதீர்கள் ”   இயக்குநர் பாண்டிராஜ் ஆதங்கம்
Advertisement

தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த் பங்கேற்ற நிலையில், அவருக்கு தற்போது ஓய்வு தேவை என்றும் அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் என்றும் இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார். 

Advertisement

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்துக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சில நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,  உடல்நலம் தேறியது. பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார்.  அவரைக் கண்ட கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கட்சியினரை பார்த்து கைகளை மெல்ல உயர்த்தி தனது மகிழ்ச்சியை விஜயகாந்த் வெளிப்படுத்திய போது, பலர் கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதா விஜயகாந்த்,  அக்கட்சித் தலைவரும் தனது கணவருமான விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.  அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த விஜயகாந்த் சற்று தடுமாறிய போது, கட்சி நிர்வாகிகள் அவரை தாங்கிப் பிடித்து மீண்டும் இருக்கையில் அமர வைத்தனர்.  பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா பதவியேற்றுக் கொண்டார்.  அவருக்கு கட்சித் தொண்டர்கள் மாலை அணிவித்து,  வீரவாள் அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ், தேமுதிக விஜயகாந்தை பொதுக்குழுவில் பங்கேற்க செய்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கேப்டன் விஜய்காந்துக்கு,  இப்பொழுது சரியான ஓய்வு தேவை.  அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் please .. பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு... 

இவ்வாறு இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

Tags :
Advertisement