மீண்டும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்ட #DonaldTrump - பென்சில்வேனியாவில் நடந்தது என்ன?
பென்சில்வேனியாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, திடீரென ஒரு நபர் மேடையை நோக்கி செல்ல முயன்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் அதிரடியாக பல வாக்குறுதிகள் இருவரும் மாறி மாறி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆக. 30) பென்சில்வேனியாவின் ஜான்ஸ்டவுனில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் மேடையை நோக்கி திடீரென செல்ல முயன்றார். அந்த நபர் கிட்டத்தட்ட பத்திரிகையாளர்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்தார். ஆனால் விரைவாக காவல்துறையினர் அந்த நபரை சூழ்ந்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கூட்டத்தில் இருந்து விரைவாக வெளியேற்றப்பட்டார்.
காவல்துறை அந்த நபரை வெளியே அழைத்துச் சென்ற போது, "டிரம்ப் பேரணியை விட வேடிக்கையாக வேறு எங்காவது இருக்கிறதா?" என்று கேலி செய்தார். அதற்கு கூட்டம் ஆரவாரம் செய்ய தொடங்கியது. சில வாரங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சியைத் தொடர்ந்து, முன்னெப்போதையும் விட டிரம்பிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த நபர் யார் மற்றும் அவரது பின்னணி என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.