For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
01:19 PM Jul 30, 2025 IST | Web Editor
கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா  அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Advertisement

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் இரு சக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த நித்தின் சாய் என்ற கல்லூரி மாணவர் கொடூரமான முறையில் மகிழுந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Advertisement

அவருடன் பயணித்த இன்னொரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த படுகொலையை நிகழ்த்திய சந்துரு என்ற மாணவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான சென்னை மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினரின் பேரன் என்று தெரியவந்திருக்கிறது. மனிதத் தன்மையின்றி நடத்தப்பட்டிருக்கும் இந்தப் படுகொலை கண்டிக்கத்தக்கது.

கொலை செய்யப்பட்ட நித்தின்சாய் என்ற மாணவருக்கும், இந்தக் கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்துரு என்ற மாணவருக்கும் முன்பகை எதுவும் இல்லை. ஆனால், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையிலான மோதலில் இருவரும் வெவ்வேறு தரப்பினரை ஆதரித்துள்ளனர். அப்போது ஒரு தரப்புக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசிய சந்துரு, இன்னொரு தரப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவர் மீது மகிழுந்தை ஏற்றி படுகொலை செய்ய முயன்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசனின் நண்பர்களான நித்தின்சாய், அபிஷேக் ஆகியோர் சந்துருவின் மகிழுந்தை தாக்கியுள்ளனர்.

அதனால் ஆத்திரமடைந்து தான் நித்தின் சாயும், அபிஷேக்கும் இரு சக்கர ஊர்தியில் சென்ற போது, அவர்கள் மீது சந்துரு மகிழுந்தை மோதியுள்ளார். அதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், மகிழுந்தை பின்புறமாக கொண்டு வந்து நித்தின் சாய் மீது மீண்டும் ஏற்றி படுகொலை செய்த காட்சிகள் கண்காணிப்புக் காமிராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த மோதல் கல்லூரி மாணவர்களுக்கு இடையே இயல்பாக நடந்த மோதலாகத் தோன்றவில்லை. தமது மகிழுந்து தாக்கப்பட்டதை கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட திமுக பிரமுகரின் பெயரன் சந்துரு, மகிழுந்தைத் தாக்கிவர்களில் ஒருவரையாவது கொலை செய்தால் தான் நாம் யார்? என்பது அவர்களுக்குத் தெரியும் என்று கூறி இந்த படுகொலையை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு என்று குற்றஞ்சாட்டுகிறேன்.

திமுக ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த அதிகாரம் படைத்த மனிதர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்ன குற்றத்தை வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்களை காவல்துறை கண்டுகொள்ளாது; அவ்வாறு நடவடிக்கை எடுத்தாலும் அரசியல் செல்வாக்கைக் கொண்டு எளிதாக தப்பி விடலாம் என்ற சூழல் ஏற்பட்டிருப்பது தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் வாயிலாக திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை.

நான் மீண்டும், மீண்டும் குற்றஞ்சாட்டி வருவதைப் போல ஆளும்கட்சியினரை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாதது தான் கொலை உள்ளிட்ட குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும். இனியாவது காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து செயல்பட வைக்க வேண்டும். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு உள்ளிட்ட மூவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement