பிரதமர் மோடியின் ஓய்வுக்கு அறிவுரை வழங்குகிறாரா அமித்ஷா? - ப.சிதம்பரம் கேள்வி!
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் ஓய்வு குறித்து பேசிய அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வுக்கு மறைமுகமாக அறிவுரை வழங்குகிறாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் நேற்று முன்தினம் 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
இந்நிலையில், 6ம் கட்ட தேர்தல் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பீகாரில் 8 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது : "77 வயதாகும் நவீன் பட்நாயக், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வுபெற வேண்டும், பாஜக ஆட்சி அமைத்தால் ஒடியா மொழிப் பேசும் இளைஞரை முதல்வராக்குவோம்." எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” – ராகுல் காந்தி
அமித்ஷாவின் கருத்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம், "வயது முதிர்வின் (வயது 77) காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வுபெற வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். ஒருவேளை பாஜக ஆட்சி அமைத்தால் மோடிக்கு(73 வயது 7 மாதங்கள்) விடுக்கப்பட்ட அறிவுரையா? பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார் எனத் தெரிகிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவராவார்." என குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/PChidambaram_IN/status/1793105914251317614