இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஆவணப்படம்... டிரெய்லர் வெளியீடு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மிகவும் சுவாரஸ்யத்தை எற்படுத்தும். இந்தியா பாகிஸ்தான் போட்டி இருநாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல், உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
பல்வேறு காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஆவணப்படம் ஒன்று தயாராகி உள்ளது.
இந்த ஆவணப்படத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் சில இடங்களில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
இதை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கிறது. இந்த ஆவணப்படம், “தி கிரேட்டஸ்ட் ரிவால்ரி : இந்தியாvsபாகிஸ்தான்” என்ற தலைப்பில் வெளியாகிறது. இதனையொட்டி இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆவணப்படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.