பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணி வாய்ப்பு... எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 665 எழுத்தர் பணியிடங்களுக்கு வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ தவிர்த்த 11 பொதுத்துறை வங்கிகளுக்கான காலிப்பணியிடங்கள் IBPS நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி இந்தாண்டு 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் (கிளர்க்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.ipbs.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். தொடர்ந்து ப்ரீ தேர்வு, மெயின் தேர்வு என 2 தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதமும், இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத முடியும்.
இதில் தேர்வாகும் நபர்கள் பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து பேங் உள்ளிட்ட வங்கிகளில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
20 வயது முதல் 28 வயதுள்ள நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவல்களை www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.