அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா..?
அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
”திமுக வெற்று கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது.
நெசவாளர்கள் நிறைந்த குமாரபாளையம் பகுதியில் உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிட்னி விற்பனையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிட்னி முறைகேடு குறித்து அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. திமுக அரசு என்பதால் ஒரு மாதத்தை கடந்தும் விசாரணை குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.’
41 பேர் உயிரிழப்பிற்கு நீதிமன்றம் சொல்வதற்கு முன்னதாக திமுக அரசு விசாரணை குழுவை ஏன் அமைத்தது. ஒரு துறையின் செயலாளர் திமுகவின் கைகூலியாக கரூர் சம்பவத்திற்கு பேட்டியளிக்கிறார். ஏடிஜிபி சொல்வது ஏற்புடையது அல்ல. 41 உயிரிழப்பிற்கு சிபிஐ விசாரணை வேண்டும். தவறு செய்த காவல்துறையை வைத்தே விசாரணை நடத்தினால் எப்படி நியாயம் கிடைக்கும். இந்த சதித்திட்டத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழக கொடியுடன் விஜய் ரசிகர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.பரப்புரையின் போது கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி தவெக கொடியை குறிப்பிட்டு ’பிள்ளையார்சுழி’ போடப்பட்டுவிட்டது என்றார்.