For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘காதல் தி கோர்’ திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

08:02 PM Nov 29, 2023 IST | Web Editor
‘காதல் தி கோர்’ திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா
Advertisement

மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள ’காதல் தி கோர்’ திரைப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் இந்திய பெண்களின் பெருந்துயரை விமர்சித்த இயக்குநர் ஜியோ பேபி, இம்முறை காதலுக்குள் இருக்கும் வரையறைகளை புதிய பரிமாணங்களில் அணுகும் படைப்பை கொண்டு வந்துள்ளார். கேரளத்தின் டீகோய் கிராமத்தில், நடுத்தர வயது தம்பதிகளான மேத்யூ தேவஸி (மம்முட்டி) ஓமணா (ஜோதிகா) மற்றும் மேத்யூவின் தந்தையும் வசித்து வருகின்றனர்.

இத்தம்பதிகளின் ஒரே மகளான ஃபெமி (அனகா மாயா ரவி) கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். மேத்யூவின் வீட்டைப்போலவே குடும்பத்திலும் கனத்த மவுனம் நிரம்பிக் கிடக்கிறது. மேத்யூ, கிராம பஞ்சாயத்தில் உள்ள 3வது வார்டின் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார். இத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும்போது, மேத்யூவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார் ஓமணா. அவர் தாக்கல் செய்யும் மனுவில், மேத்யூ ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் விவாகரத்து கோருவதாக குறிப்பிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது.

தேர்தல் நேரத்தில் எழும் இந்தக் குடும்ப பிரச்சினை, சமூகத்தில் தனக்கு ஏற்படபோகும் விளைவுகளின் பாதிப்புகள் குறித்த எண்ணம் மேத்யூவை கடுமையாக பாதிக்கிறது. இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றனரா, தன்பால் ஈர்ப்பாளரான மேத்யூஸ் தேர்தலில் வென்றாரா, இல்லையா எனபதே திரைக்கதை. வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதல் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது பிரபல நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகளவில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில், காதல் தி கோர் திரைப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால் கத்தார், குவைத் மற்றும் அமீர நாடுகளில் இப்படத்திற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement