கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட உள்ளது!!
கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை பிற மாணவிகளின் ஷூக்களை புர்காவால் துடைக்க வைத்த ஆசிரியை மீதான விசாரணை அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனது பெற்றோருடன், நேற்று கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார். அதில் ஆசிரியர் அபிநயா என்பவர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதுடன், உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என்று கேட்டுள்ளார். இதற்கு மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி தெரிவித்தாகவும், அதற்கு “மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி” என்று சொல்லி ஆசிரியர் அபிநயா அடித்ததாகவும், பிற மாணவிகளின் காலணியை புர்காவை வைத்து துடைக்க வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் புகார் அளித்ததற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த புகார் குறித்து முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நேற்று (22.11.2023) நேரடியாக பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விசாரணை மேற்கொண்டார். மேலும் கோவை மாநகர காவல் உதவி ஆணையர் சந்திரசேகரும், துடியலூர் காவல் நிலைய போலீசாரும் நேற்று பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட உள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை விசாரணை விவரங்களை வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.