‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ - ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!
மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ மற்றும் சாட் ஜிபிடி , டீப்சீக் தொழில்நுட்பங்கள் கொண்ட செயலிகள்/கருவிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு நிதிச் செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டால் அரசின் தரவுகள் வெளியில் கசியும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது அரசு தரவு மற்றும் ஆவணங்களின் ரகசியத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பதாக தீர்மானக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை ஜனவரி 29 ஆம் தேதி அன்று ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
பொருளாதார விவகாரத் துறை, செலவினத் துறை, பொது நிறுவனங்கள் துறை, டிஐபிஏஎம் மற்றும் நிதிச் சேவைகள் துறை உள்ளிட்ட அமைச்சகத்திற்குள் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் நிதிச் செயலாளர் கையெழுத்திட்ட இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அரசு மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் ஏஐ சேவைகளை அரசு கருவிகளில் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது. இதேபோல் பல பன்னாட்டு நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் தரவுப் பாதுகாப்பு கவலைகள் காரணமாக சீன டீப்சீக்(DeepSeek) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ(OpenAI) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.