VoterID விவரங்களை ஆளுநர் ஏன் கேட்கிறார்? மாணவர்களின் போர்க்கொடியால் சுற்றறிக்கை வாபஸ்!
மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களை சேகரிக்கும்படி கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பெறுவதற்கான சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பெறும்படி ஆளுநர் மாளிகையில் இருந்து வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பல்கலைக்கழகத்தின்கீழ் வரும் கல்லூரிகளின் முதல்வர்கள், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை பெற்று, மார்ச் 19-ம் தேதிக்குள் admin@tnteu.ac.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டு ஆளுநர் சட்டவிரோதமாக மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மாணவர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை பெறும்படி அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் உடனடியாக மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “இனி தமிழில் பேசப் போகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!
இதனிடையே, மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களை சேகரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பும் விளக்கம் அளித்துள்ளது.