கோவையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் தொடங்கியது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் திமுக கூட்டணிகளின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசுகின்றனர். தவிர, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (ஜூன் 15) மதியம் கோவை வந்தடைந்தார். அவரை எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் திரண்டு வரவேற்றனர். தொடர்ந்து திமுக கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக முப்பெரும் விழா தொடங்கியது https://t.co/WciCN2SiwX | #DMK | #MKStalin | #Kovai | #TamilNadu | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/dowgly77AQ
— News7 Tamil (@news7tamil) June 15, 2024
இந்நிலையில், இந்த முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, திக தலைவர் கீ.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மேடைக்கு வந்தனர். அதேபோல், அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு, கே.என்.நேரு, பெரியகருப்பண், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் மேடைக்கு வந்தனர்.
திமுக முப்பெரும் விழாவையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால் கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி ஆகியோரது தலைமையில் 2 டிஐஜிக்கள், 12 காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், டிஎஸ்பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என 3,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.