திமுகவின் முப்பெரும் விழா - கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுகவின் முப்பெரும் விழா பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றடைந்தார்.
நடந்து முடிந்துள்ள 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து திமுக எம்பிக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 40க்கு 40 தொகுதிகளை வெல்வதற்கு காரணமாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதோடு சேர்த்து கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழாவையில் நடத்த திமுக திட்டமிட்டது.
அதன்படி இன்று கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் மாலை 4 மணிக்கு முப்பெரும் விழா தொடங்குகிறது. இந்த விழாவில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.