"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்" - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!
"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்" என மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்து ரேபரேலி தொகுதியின் உறுப்பினராக உள்ளார். மக்களவையில் உறுப்பினராகவும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.
இதற்கிடையே, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இந்தியா கூட்டணி கட்சிகளின் மக்களவை குழுத் தலைவர்களின் கூட்டம் நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. ஆலோசனையின் முடிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள் : ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததா ‘இந்தியன் 2’ ட்ரெய்லர்?
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தியின் புதிய பொறுப்பிற்கு இந்தியா கூட்டணி வரவேற்கிறது. அவரது குரல் மக்கள் மன்றத்தில் (மக்களவையில்) தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்” என வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :
"சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம். நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவோம்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
b