“தெலங்கானா முதலமைச்சரை போல திமுகவும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்படும்” - தமிழிசை சௌந்தரராஜன்!
மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“எனது தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை திரும்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். பிரதமர் மோடி ரூபாய் 8000 கோடி அளவிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாட்டிற்கு வழங்குகிறார். நெறிமுறைகளின் படி தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர் இதனை புறக்கணித்து உள்ளார். இதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது தமிழகத்திற்கு வழங்கிய திட்டங்களை விட 7 மடங்கு அதிகமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானா முதலமைச்சராக இருந்தவர் இவ்வாறு பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது அவர் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.