For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” - கனிமொழி சோமு!

“தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என மாநிலங்களவையில் எம்பி கனிமொழி சோமு பேசியுள்ளார்.
04:14 PM Feb 04, 2025 IST | Web Editor
“கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்”   கனிமொழி சோமு
Advertisement

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.
சோமு இன்று பேசியதாவது:

Advertisement

“இந்த நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் தொண்டு செய்வதே இந்த அரசின் தலையாயக் கடமை. அந்த நோக்கத்தின் பாதையிலேயே இந்த அரசு செயலாற்றி வருகிறது” என்று குடியரசுத் தலைவர் உரையின் மூலமாக இந்த அரசு சொல்கிறது.

ஆனால், அவர் அந்த உரையை வாசித்த அடுத்த நாளே வெளியான மத்திய அரசின் பட்ஜெட்டில் சுமார் ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை, அதன் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது இந்த அரசு. தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து நடத்த முயல்கிறது இந்த அரசு.

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள், தாம்பரம் செங்கல்பட்டு இடையிலான உயர்மட்ட நெடுஞ்சாலை போன்ற தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் திட்டங்களை முழுமையாகப் புறக்கணித்துள்ளது இந்த அரசு.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் மூன்று பெரும் புயல்களைச் சந்தித்து மிகப்பெரும் பொருளாதார மற்றும் நிதி இழப்புக்கு ஆளானது தமிழ்நாடு அரசு. இந்த நிலையிலிருந்து மீள 45 ஆயிரம் கோடி நிதி உதவி வேண்டும் என்று அவ்வப்போது கடிதம் வாயிலாகவும், நேரிலும் வேண்டுகோள் வைத்தும் இதுவரை மத்திய அரசு கொடுத்த நிதி 276 கோடி ரூபாய் மட்டுமே. இதுதான் ஒட்டுமொத்த மக்களைக் காக்க நீங்கள் செயலாற்றும் விதமா?

ஒரே நாடு ஒரே வரி என்ற உணர்வோடு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக்கப்பட்டதால் நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களும் பயனடைந்துள்ளதாக இந்த அரசு சொல்கிறது. ஆனால் உண்மை என்ன ..?

தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாய் வரி செலுத்தப்படுகிறது என்றால், மத்திய அரசின் வரிப்பகிர்வின் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் தொகை வெறும் 29 பைசாதான். ஆனால் அதே ஒரு ரூபாயைக் கொடுத்துவிட்டு 2.73 ரூபாயை வரிப்பகிர்வாகப் பெறுகிறது உத்தரப் பிரதேசம்.

இன்னொரு கோணத்தில் சொன்னால் 5.16 லட்சம் கோடி ரூபாயை வரியாகச் செலுத்திவிட்டு தமிழ்நாடு திரும்பப் பெறுவது. 2.24 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. அதாவது பாதி கூட திரும்பக் கிடைக்கவில்லை. ஆனால் 2.08 லட்சம் கோடி ரூபாயை மட்டுமே செலுத்தும் உத்தரப் பிரதேச மாநில அரசு, மத்திய அரசிடம் இருந்து பெறும் வரிப்பகிர்வு. 9.04 லட்சம் கோடி ரூபாய், அதாவது நான்கு மடங்குக்கும் அதிகம்!

தேசிய அளவிலான ரயில்வே நிதி ஆதாரத்தில் வெறும் 2.5 சதவிகிதத்தை மட்டுமே தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு அளிக்கிறது மத்திய அரசு. இது எந்த வகையில் நியாயம்? வரி வசூலில் போதிய பங்களிப்பைச் செய்து, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கணிசமான பங்கைச் செலுத்தும் தமிழ்நாடு அரசை இன்னும் பல வகையிலும் வஞ்சிக்கிறது மத்திய அரசு. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துக்கொண்டு பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் திறக்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால்தான் அந்த நிதியை விடுவிப்போம் என்று மிரட்டுகிறது மத்திய அரசு.

புதிய கல்விக்கொள்கையை இந்த அரசு அறிமுகம் செய்யும் முன்பே, இதிலுள்ள பல விஷயங்களை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. பொதுப்பட்டியலில் உள்ள கல்வி தொடர்பான ஒரு விசயத்தில் இப்படி ஒருதலைபட்சமாக நடந்துகொண்டு ஒரு மாநில அரசை மிரட்டுவது, அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் சிதைப்பதாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் இந்த அரசு இப்படி நடந்துகொள்வதுதான் வேதனையானது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது என்பதைக்கூட உணர மறுக்கிறது இந்த அரசு. இதற்கு நேர் மாறாக எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவச் செல்வங்கள் படிப்பதற்கு சமூகமோ பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்ற கொள்கைப்படி திமுக தலைமையிலான ஆட்சியை நடத்தி வருகிறார்.

அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் ஒரு சொற்பத் தொகையை மத்திய அரசு ஒதுக்குகிறது. அதற்கு பிரதமரின் வீடுகட்டும் திட்டம் என்று பெயர் வைக்கிறது. உதாரணத்திற்கு நகர்ப்புறத்தில் வீட்டு வசதியை ஏற்படுத்தும் பிரதமரின் பெயரிலான திட்டத்திற்கு ஒரு வீட்டிற்கு மத்திய அரசு தரும் தொகை 1.5 லட்சம். ஆனால் மாநில அரசு ஒதுக்க வேண்டிய தொகையோ 12 முதல் 14 லட்சம் வரை.

உண்மையைச் சொன்னால், இந்தத் திட்டத்திற்கு முதலமைச்சரின் வீட்டுவசதித் திட்டம் என்று பெயர் வைத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு விஷயங்களை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். மக்களவையில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த அரசு சென்கோலை வைத்தது. குடியரசுத் தலைவர் தனது உரையை நிகழ்த்துவதற்காக மக்களவைக்கு வந்தபோது அவரை வரவேற்க அந்த செங்கோலை எடுத்துச்சென்று வாசலில் இருந்து அவரை வரவேற்று அழைத்துவந்து அமரவைத்துவிட்டு, மீண்டும் அந்த செங்கோலை அங்கே வைத்தார்கள். இது புது மரபாக இருக்கிறது.

ஆனாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு ஒரு மரபைக் கொண்டுவந்து அமல்படுத்தினால் அதிலுள்ள உணர்வைப் புரிந்துகொண்டு நடந்து கொள்கிறார் நமது குடியரசுத் தலைவர். ஆனால் இதே போன்றுதான் பல பத்தாண்டுகளாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதம் பாடுவதும் வழக்கத்தில் உள்ள மரபாக இருக்கிறது.

ஆனால் இந்த மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, அங்கு நியமனப் பதவியில் உள்ள ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தொடர்ந்து அமல்படுத்த நினைக்கும் இந்த மரபை ஏற்க மறுத்து, புதிய விஷயத்தை புகுத்த நினைக்கிறார். அதை இந்த அரசும் வேடிக்கை பார்க்கிறது. இது கண்டனத்திற்குரியது.

இப்படிப்பட அத்துமீறல்களை சட்டத்திற்கும், மரபுக்கும் மாறான விஷயங்களை தொடர்ந்து செய்வதால்தான் தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என் ரவியைத் திரும்பப்பெறும்படி சொல்கிறோம். இல்லாவிட்டால், இதற்கு ஒரு தீர்வாக, ஆளுநர்களுக்கென்று ஒரு செயல்முறையை, அதிகார வரம்பை நிர்ணயிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற விவகாரங்களுக்கான நிரந்தரத் தீர்வுக்ககாக ஆளுநர் பதவியையே நீக்கவும் வலியுறுத்தி வருகிறது திமுக.

அதேபோல கச்சத்தீவை இவங்கைக்கு தாரைவார்த்தது திமுகதான் என்று பல நேரங்களில் இந்த அவையிலும், வெளியிலும் எங்கள் இயக்கமான தி.மு.க. மீது உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது உண்மையல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் உரிய பிரிவுகளைத் திருத்தாமல் இப்படி நமது நாட்டிற்கு உரிமையான ஓர் இடத்தை இன்னொரு நாட்டிற்கு தாரை வார்ப்பது சரியல்ல என்று, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதே அவையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன என்று சில நாட்களுக்கு முன்னதாக இந்த அவையில் எங்கள் குழுத் தலைவர் திருச்சி சிவா சொன்னதை அவையின் முன்னவர் அமைச்சர் ஜே.பி. நட்டாவும் அதை ஒப்புக்கொண்டார்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் தி.மு.க. என்பதையும் இங்கே யாரும் மறுக்க முடியாது என்பதை இந்த அவையில் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகிய முப்பெரும் தலைவர்களின் சீரிய வழிகாட்டுதலில், திமுக ஆட்சியின் பயனாக தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசுக்கு கிடைக்கும் அபரிமிதமான வருவாய் எல்லாம் வட மாநிலங்கள் எடுத்துக் கொண்ட போதும்,

வடக்கிலிருந்து உழைத்துப் பிழைக்க வழி தேடி வருவோரெல்லாம் வாழ்வாங்கு வாழ, வந்தாரை வாழ வைக்கும் பூமியாம் எங்கள் தமிழ் நாடு இன்று திமுக ஆட்சி செய்த வளர்ச்சி காரணமாக வருவாய் ஈட்டுவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது வியப்பேதும் இல்லை. உணமி இவ்வாறு இருக்க, இந்த நாட்டின் சுமார் 25 கோடி பேர் ஏழ்மையிலிருந்து விடுபட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் உரையின் மூலமாக இந்த அரசு சொல்லியிருப்பதுதான் மிகப்பெரிய நகைச்சுவை!”

இவ்வாறு டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.

Tags :
Advertisement