திமுக-விசிக இடையே தொகுதி பங்கீடு - இன்று கையெழுத்தாக வாய்ப்பு!
திமுக - விசிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று திமுக - விசிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. சந்தித்தார். தொடர்ந்து, திமுக குழுவுடன் தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதையும் படியுங்கள் : தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்?
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும்விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.