”2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது” - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவது உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் மக்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வந்துள்ளேன். தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட யார் வர கூடாது என்ற முடிவை மக்கள் எடுக்க வேண்டும். மூன்று தேர்தலில் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தீர்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்தினீர்கள். அதற்கு பதில் திமுக பட்டை நாமம் தான் உங்களுக்கு வழங்கியது. தூய்மை பணியாளர்களை வேலையை விட்டு நீக்கினார்கள், கைது செய்து அடைத்தார்கள்.இப்படி ஒரு கொடுங்கோல் ஆட்சியை தமிழகம் பார்த்தது கிடையாது. தமிழ்நாட்டின் நேரடி கடன் 9 லட்சத்து 30,000 கோடி. இரண்டு மடங்கு அதிகமாக கடன் வாங்கிய திமுக கடனை அடைக்க கடன் வாங்குகிறார்கள். நிர்வாகம் தெரியவில்லை என்றால் வீட்டிற்கு செல்லுங்கள்.
லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் முதல்வர் ஸ்டாலின் டிராமா நடத்துகிறார்.பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் திமுகவை வீட்டுக்கு அனுப்புங்கள். திராவிட மாடல் பழைய அம்பாசிடர் மாடல். திமுகவை மீண்டும் வர வைக்காதீர்கள் என்று உங்கள் காலை பிடித்து கேட்கிறேன். இந்தியாவிலேயே போதை அதிகம் விற்பனையாகும் மாநிலம் தமிழகம், அதை விற்பது திமுகவினர். திறமையான தமிழ காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் திமுகவினரிடம் சிக்கிக்கொண்டு உள்ளது.
மொழி போர் என ஏமாற்றி ஆட்சிக்கு வந்து தமிழுக்கு என்ன செய்தார்கள்.கல்வி கொள்கையில் தமிழ் பாடம் கட்டாயம் என்று வந்துள்ளதா..?. சமூக நீதி என பேசும் திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சம்மந்தம் உள்ளதா..?.தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அனைத்து சமுதாயத்துக்கும் சாதி வாரி கணக்கெடுப்பு அவசியமானது. கர்நாடகாவில் இரண்டு முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சிறப்பாக திட்டங்கள் கொடுக்கிறார்கள்.தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயம் வன்னியார் சமுதாயம், இட ஒதுக்கீட்டுக்காக ராமதாஸ் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார். 10.5 சதவீதமே தவறானது, 15 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் உள் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என தீர்ப்பு கொடுத்து 1240 நாள் ஆகிறது. பட்டியல் இன சமுதாயம், வன்னியர் சமுதாயம் முன்னேற கூடாது என ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். வருகிற தேர்தலில் இவர்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும். 1.30 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் போதை பொருளுக்கு அடிமையாகின்றனர். வேலை இல்லாததுக்கு ஸ்டாலின் தான் நேரடி காரணம். உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் தொழிற்சாலையில் 75 சதவீதம் வேலை வழங்க வேண்டும் என ஆந்திராவில் சட்டம் உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது. தமிழக மக்கள் எல்லோரும் சேர்ந்து திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”என்று தெரிவித்தார்.