“#VCK மது ஒழிப்பு மாநாட்டில் #DMK பங்கேற்பு” - திருமாவளவன் எம்.பி. பேட்டி!
மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில், மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சியில் அக். 2-ம் தேதி நடத்துகிறார். இந்த மாநாட்டில் ஜாதி, மதவாத அமைப்புகளை தவிர அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் இன்று (செப். 16) அழைப்பு விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது,
“முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப் பயணத்துக்கான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அவரிடம் தெரிவித்தோம். பல ஆயிரம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக முதலமைச்சரின் பயணம் உள்ளது. விசிக நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டுக்கான அழைப்பை அவருக்கு வழங்கினோம். இந்த மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், டி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் தெரிவித்தார். திமுக கொள்கைதான் மதுவிலக்கு கொள்கை என்றும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மதுவிலக்கு அமல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் வழங்கினேன். திமுக - விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது எங்களின் நீண்ட கால கோரிக்கை. முதலமைச்சருடனான சந்திப்புக்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
திருமாவளவன் எம்.பி. சமூகவலைதளப் பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது தொடா்பாக அவர் பேசிய விடியோ வெளியிடப்பட்டு, பின் நீக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிய நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பியுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் பேசியது குறிப்பிடத்தக்கது.