கன்னியாகுமரியில் மக்களை சந்தித்த திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியவை குறித்து குவிந்த கோரிக்கைகள்!
திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கன்னியாகுமரியில் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற நிலையில், மத்திய அரசின் கூடுதல் தலைநகரை தென் மாநிலத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நேற்று (05/02/2024) முதல் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் பணியை தொடங்கினர்.
அதன்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – DMKManifesto2024’ என்று கோரிக்கை மனுக்களை மக்களை நேரில் சந்தித்து பெறும் பணியை தொடங்கியுள்ளது திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு. திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நேற்று தூத்துக்குடியில் மக்களிடம் இருந்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களை பெற்றனர்.
இதில், வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச்சேர்ந்தவர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆரவமுடன் வழங்கினர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.
இந்நிலையில், இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குழுவினருடனான சந்திப்பில் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களைச்
சார்ந்த பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முன் வைத்தனர்.
அவற்றில் சுவாரசியமான பரிந்துரைகள் சில:
♦️மக்கள் நலத்திட்டங்களின் பெயர்கள் இந்தியில் மட்டும் இருப்பதை கண்டிக்க வேண்டும்
♦️சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கியுள்ள நிதி அளவைப்போன்று தமிழ் மொழிக்கும் நிதி வழங்க வற்புறுத்த வேண்டும்
♦️ஆளுநருக்கான அதிகார வரம்புகள் குறைக்கப்பட வேண்டும்
♦️மத்திய அரசு மாநில அரசுடன் கூட்டாட்சியை உறுதி செய்ய வேண்டும்
♦️இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள் அமைக்க வேண்டும்
♦️மத்திய அரசின் கூடுதல் தலைநகரை தென் மாநிலத்தில் அமைக்க வேண்டும்
♦️கன்னியாகுமரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும்; அந்த விமான நிலையத்திற்கு அய்யா வைகுண்ட சுவாமிகள் பெயரை வைக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.