"திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை" - விஜய் திட்டவட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர். செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,
"கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. மத்திய அளவில் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஒருநாளும் எடுபடாது. சமூக நீதியும் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சமத்துவமும் ஆழமாய் வேர் ஊண்டிய மண் தமிழ்நாடு.
இங்கு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை அவமதித்து அரசியல் செய்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெறாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜக உடன் கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை. நம் தமிழக வெற்றிக் கழகம். கொள்கை எதிரிகள் பிழைவாத சக்திகள் உடன் என்றைக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி இல்லை என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது.
கூட்டணி என்றாலும் தமிழக வெற்றி கழகம் தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜாவுக்கு எதிரானதாக தான் இருக்கும் என்பதையும் அதில் சமரசம் என்ற பேச்சிக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல உறுதியான தீர்மானம். நம் அனைவருக்குமே வாழ்வாதாரம் உள்ளது. ஆனால், நம்மோடு வாழ்வாதாரத்தில் அடிப்படையாக இருப்பது விவசாயிகள் மிக முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட விவசாயிகளுடன் கூட நிற்பது நமது கடமை, கண்டிப்பாக நாம் விவசாயிகளின் பக்கம் நிற்போம்.
பரந்தூர் விமான நிலைய பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தோம். அதில், பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புது விமான நிலையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வருஷ கணக்காக போராடி வருகின்றனர். போராட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நான் அவர்களை சென்று பார்த்தேன். அதற்கு அடுத்த நாளே "மக்களை பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைக்கப்படும்" என அரச சார்பாக விளக்க அறிக்கை வந்தது. அதில் 1005 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் இருப்பதால் மக்களுக்கு பெரிதளவில் பாதிப்பு இருக்காது என்றளவில் கூறியிருந்தார்கள்.
மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் என்ன? ஒன்று அங்கு விமான நிலையம் வரும் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் வராது என்று சொல்ல வேண்டும். வெறும் 1005 குடும்பங்கள் என்றால் சாரணமா? 15,000 மக்கள். அவர்களும் நமது மக்கள்தானே. ஏன் அவர்கள் மீது அக்கறையும் மனிதாபிமானமும் உங்களிடம் (முதலமைச்சர்) இல்லை? எதிர்கட்சியாக இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமா?
நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை, மிகப்பெரிய நீர்நிலைகளை, ஆயிரக்கணக்கான வீடுகளை அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு விமான நிலையம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? அப்பறம் எப்படி நீங்கள் மக்களின் முதலமைச்சர் என்று கூறுகிறீர்கள்? உங்களுக்கும் பரந்தூர் பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் உள்ளீர்கள். ஆனால் விமான நிலையம் அமைப்பதற்கு திமுக அரசு தான் பரந்தூரை பரிந்துறை செய்தது என்று மத்திய அமைச்சர் சமீபத்தில் கூறினார்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.