மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை சந்தித்து திமுக எம்.பி வில்சன் மனு! 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு!
3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை திமுக எம்.பி வில்சன் சந்தித்து மனு அளித்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இதையொட்டி, 5.65 லட்சம் காவலர்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து ஏற்கெனவே பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும் இந்த 3 சட்டங்களும் அமலுக்கு வரும் திங்கள்கிழமையன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 17,500 காவல் நிலையங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த 3 சட்டங்களை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி வில்சன் வெள்ளிக்கிழமை அன்று சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். இந்த மனுவில் 3 குற்றவியல் சட்டங்களையும் பரிசீலிக்குமாறு எம்.பி. வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி வில்சன் தெரிவித்ததாவது..
“சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலைச் சந்தித்து மூன்று குற்றவியல் சட்டங்களையும் அமல்படுத்த தடை விதிக்க கோரி மனு ஒன்றை அளித்துள்ளேன். இந்த மூன்று சட்டங்களும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் உள்ளிட்டவைகள் கவலை தெரிவித்தது குறித்து சட்ட அமைச்சரிடம் கூறியுள்ளேன். மேலும் இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் குறித்தும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சட்ட அமைச்சர் உறுதியளித்தார்.” இவ்வாறு வில்சன் எம்பி தெரிவித்துள்ளார்.