மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ்!
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச்.10) நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் அமர்வில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.-க்கள் தன்னை சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரிந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி, நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அதில் கனிமொழி எம்.பி. கூறியிருப்பதாவது,
"மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி தொடர்பாக பதிலளிக்கும்போது, மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு முதலில் ஏற்றுக்கொண்டதாகவும் அதன் பின்னர் நிலைப்பாட்டை மாற்றி கொண்டதாகவும் தெரிவித்தார். இந்த கூற்று தவறானது, மக்களவையை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, நகாரீகமற்ற, ஜனநாயகத்துக்கு புறம்பான,நேர்மையற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசியுள்ளார். இது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே மக்களவையை தவறாக வழிநடத்துயதற்காகவும் அவையை அவமதித்ததற்காகவும் மக்களவை விதி 223ன் கீழ் மத்திய கல்வி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.