Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திமுக வெளிப்படையான இயக்கம் , திரைமறைவில் செயல்படுவது அதிமுகதான்" - இபிஎஸ்க்கு #RSBharathi பதில்!

05:11 PM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

திமுக எப்போதுமே வெளிப்படையான இயக்கம். திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுகவின் கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி "சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்தாலேயே பள்ளியில் பேச அனுமதித்திருக்கிறார்கள்' எனக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். முதலமைச்சராக இருந்த நீங்கள் ஒரு விஐபிதானே? ஒரு விஐபி- யைத் தேடி நிறையப் பேர் பார்க்க வருவார்கள் என்பது அடிப்படை தியரி. அப்படிப் பார்க்க வருகிறவர்கள் ஒவ்வொருவரின் பின்புலத்தை அலசிப் பார்த்துவிட்டா அனுமதி அளிப்பார்கள்? இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதுதான் கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் அவருடைய கோஷ்டியினர் கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு 2018-இல் கைதானார்கள். கள்ளநோட்டு கும்பலுடன் பழனிசாமி இருக்கும் புகைப்படம் வெளியாகி அன்றைக்குச் சந்தி சிரித்தபோது அவர் எங்கே போனார்?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு சீட் கொடுத்தது பொதுச் செயலாளர் பழனிசாமிதானே? "சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் பேச்சுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனச் சொல்லும் பழனிசாமி, ஆனந்த், ஹரிதரன் ஆகியோரது செயல்களுக்கும் பொறுப்பு ஏற்றாரா? "அதிகாரத்துக்கு என்றுமே நாங்கள் அடிமை இல்லை. எங்களுக்கு மரியாதை, தனித்துவம் உள்ளது" எனப் பெருமை பேசியிருக்கிறார். “அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை" என்றால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் டெல்லிக்கு ஏன் காவடி தூக்கினீர்கள்?

கட்சிக்காரர்கள் தவறு செய்திருந்தால் அம்மையார் ஜெயலலிதா பொறுப்பில் இருந்து நீக்குவார்; கட்சியை விட்டு கட்டம் கட்டுவார்; எம்.எல்.ஏ பதவியை எல்லாம் பறித்ததில்லை. ஆனால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அதிமுக எம்.எல்.ஏ-கள் 18 பேரை நீக்கிய நீங்கள் அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை என்று சொல்ல நா கூசவில்லையா? தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டு, அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றவில்லையா? . அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீதான தாக்குதல் போலீஸுக்கே பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்துகிறது" என பழனிசாமி புலம்பியிருக்கிறார். பழனிசாமி ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடைகளை அமைக்க முயன்றபோது திருப்பூர், சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். ஆனால், 'சாமளாபுரத்தில் பெண்கள்தான் போலீஸை தாக்கினார்கள். தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவது பேஷனாகிவிட்டது' என்று அன்றைக்கு வியாக்கியானம் பேசியவர்தான் பழனிச்சாமி.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவுக்கு தற்கொலைக்கு தள்ளியது யார்? அழுத்தம் கொடுத்து அவரை உங்கள் ஆட்சியில் போலீஸாரால் பெண்களுக்கு மட்டுமல்ல, போலீஸாரால் போலீஸுக்கே பாதுகாப்பில்லாமல் போனது எல்லாம் 'செலக்டிவ் அம்னீஷியா' போல் மறந்துவிட்டதா? "உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்கவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள்'' என உளறிக் கொட்டியிருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. புகைப்படங்களும் வெளியிட்டோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அது தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதை இன்றும் இணையத்தில் தேடிப் படிக்கலாம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற முடியாதவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருக்கும் முதலமைச்சரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. 75 நாட்கள் அப்போலோவில் அவர் சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதலமைச்சரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?

திமுக எப்போதுமே வெளிப்படையான இயக்கம். திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுகவின் கொள்கை. தனது ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் தரை மட்டத்துக்கு இறக்கி பாழ்படுத்திய பழனிசாமிக்கு யாரையும் குறை சொல்லும் தகுதியோ அருகதையோ கிடையாது. தானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags :
AIADMKDMKEdappadi palanisamyEPSrs bharathi
Advertisement
Next Article