"சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக திமுக உள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று (ஏப்.14) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் சமத்துவ நாள் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிதாவது,
"இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த சமூகத்தில் இந்த சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்கள் உள்ளிற்றவற்றிக்கு எதிராக முழங்கி, வரலாற்றை மாற்றிய அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். நமது திமுக ஆட்சியில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம். இன்று காலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளோம்.
சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும். இந்த மண்ணில் உள்ள ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம். அண்ணல் அம்பேத்கரை உயர்த்து பிடித்து கொண்டாடும் இயக்கம்தான் திராவிடம் இயக்கம். அவர் எழுதிய சாதிய ஒழிக்க வழி என்ற நூலை 1930 ம் ஆண்டே தந்தை பெரியாரி தமிழில் வெளியிட்டார்.
அம்பேத்கரின் பெயரை அவர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவில் முதல்முதலாக தமிழ்நாட்டில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பெயர் சூட்டினார். இந்த பாதையில்தான் அண்ணல் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என முழங்கிக்கொண்டிருக்கிறோம். அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்தார்.
அவர் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் தனிப்பெரும் தலைவராக விலங்கிய எம்.சி.ராஜா பெயரில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள மாணவர் விடுதியை திறந்துவைத்துவிட்டு இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளோம். சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவது உறுப்பினர் எம்.சி.ராஜா. அவர்தான் முதல்முதலாக பட்டியலின மக்களின் துயரங்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
நீதிக்கட்சி உருவாக்கிய தலைவர்களில் எம்.சி.ராஜா முக்கியமான ஒருவர். 1927ம் ஆண்டே 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற நூலை எழுதி வெளியிட்டார். 1937ல் சென்னை மாகாணத்தின் இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அத்தகைய தலைவர் பெயரால் அமைந்திருக்கக்கூடிய அந்த விடுதி லட்சியத்தோடு படித்து முன்னேறவேண்டும் என்று பாடுபட்டவர்களின் இடம். திருமாவளவன் எம்.பி.யும் அந்த விடுதியில் தங்கி படித்தவர்தான். அந்த விடுதியை திறந்துவைத்துவிட்டு சுற்றிப் பார்த்தோம்.
அப்போது "இன்னும் 5 வருடங்கள் இங்கு தங்கி படிக்கலாம் போல் இருக்கிறது" என்று திருமாவளவன் கூறினார். இன்று கொள்கை பிடிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார். இத்தகைய சிறப்புமிக்க அந்த விடுதியை திறந்து வைத்த இந்நாளில் அந்த விடுதியின் முகப்பில் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் எண்ணிலங்கா சாதனைகளை செய்துக்கொண்டுள்ளோம். அதனால்தான், சென்னையில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துக் கொண்டே வருகிறது.
அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி உதவியாக இருக்கும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரின் வழியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய அரசாக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் சமூக நீதி, சமத்துவ சிந்தனைகள் குறித்து 6977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது, அச்சமூக மாணவர்களை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது. மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் போன்றது; பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பைப் போன்றது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 174 மாணவர்கள் முதுகலை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். கல்வி, வேலை, அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என எல்லாமே ஜனநாயகமாக மாறிவிட்டது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.